புதன், 27 மார்ச், 2013

கோட்டூர் அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தலபெருமை





தேவலோக மங்கை ரம்பை இந்திர லோகத்தில் செய்த தவறுக்காக பூமிக்கு செல்லும்படி சபிக்கப்பட்டாள்.



அவள் மீண்டும் இந்திர லோகம் செல்வதற்காக இத்தலத்து ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள். பிரதோஷ கால மூர்த்தி இங்கு தனி சன்னதியில் சிலை வடிவில் உள்ளது.



மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை இன்றும் பார்க்கலாம்.  

                             



                 தல வரலாறு:  

                             

               விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அதற்கு பிரம்மா, ""இந்திரனே! ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும்.



அவரது முதுகெலும்பு மிகவும் பலமானதா விளங்குவதற்கு காரணம் உள்ளது. முன்னொரு காலத்தில் திருப்பாற்கடல் கடைவதற்கு முன்பாக தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களை இந்த முனிவரிடம் ஒப்படைத்து பத்திரமாக வைத்திருக்க வேண்டினார்கள்.



இவர் அனைத்து ஆயுதங்களையும் தன் வாயில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். இவரது தவத்தின் சக்தியால் அனைத்து ஆயுதங்களும் உருகி அவரது முதுகெலும்பில் சேர்ந்துவிட்டன. இதனால் அவரது முதுகெலும்பு மிகவும் பலமுள்ளதாகிவிட்டது,'என்றார்.



இந்திரனும் அதன்படி முனிவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி அரக்கனை கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.



இந்த தோஷத்தை போக்க தேவகுருவை நாடினான். அவரும்,""இந்திரனே! நீ பூவுலகில் சிவதல யாத்திரை செய்து சிவபூஜை செய். அப்போது, தேவர்கள் அமுதம் பெறும் போது சிந்திய அமுதத்துளியால் உண்டான வன்னிமரத்தின் அடியில் சிவலிங்கம் இருக்கும்.



இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் உனது தோஷம் நீங்கும்,'என்றார்.



அதன்படி இந்திரன் இங்கு தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றான்.



இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும், ஐராவத யானை பூமியில் கோடு கிழித்ததால் கோட்டூர் என்றும் அழைக்கப்பட்டது.

1 கருத்து: